RCB vs CSK: ப்ராவோ உடைத்த பெங்களூரு அரண், அனாயாசமாக பெங்களூரை பந்தாடிய சென்னை - பிரகாசமான ப்ளே ஆஃப் வாய்ப்பு.

ஐபிஎல் 2021ஆம் ஆண்டுக்கான 35ஆவது போட்டி, நேற்று (செப் 24, வெள்ளிக்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் பெங்களூரு அணியும், மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு 156 ரன்கள் மட்டுமே குவித்தது. அதை சென்னை 11 பந்துகளுக்கு முன்பே அடித்து போட்டியை வென்றது. வழக்கம் போல தோனியின் பாணி இந்த போட்டியிலும் கை கொடுத்தது என இணையமே புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. ப்ராவோ பந்துவீச்சு பெங்களூருவின் ரன்ரேட்டுக்கு மிகப்பெரிய வேகத்தடையாக அமைந்தது, சென்னை அனாயாசமாக வெற்றி பெற வழிவகுத்தது. கோலி - படிக்கல் அரண் டாஸ் வென்ற சென்னை, பெங்களூரை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அவ்வணியின் தலைவர் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13.2 ஓவர் வரை இருவரும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் 111 ரன்கள் வரை குவித்தனர். இருவருமே அரை சதம் விளாசியதும் பாராட்டுக்குரியது. பெங்களூருக்கு இந்த இரு பேட்ஸ்மென்களும் இரும்பு அரண் போல நின்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த போது, சென்னை விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது போலத் தெரிந்தது. ஹேசல்வுட், ஜடேஜா, ப்ராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என சென்னையின் அனைத்து பந்து வீச்சாளர்களும் ஒரு சுற்று வந்துவிட்டனர். அப்போதும் பெங்களூரின் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, ப்ராவோவின் 13.2ஆவது பந்தில், விராட் கோலி அடித்த பந்து ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது. பெங்களூரின் பேட்டிங் அரண் தகர்ந்தது. வலுவான பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருக்கும் பெங்களூரு அணி, அடுத்தடுத்து சிறப்பாக அடித்து ஆடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஏ பி டிவில்லியர்ஸ், தேவ் தத் படிக்கல், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் என எல்லா முன்னணி பேட்ஸ்மென்களும் சீட்டு கட்டு போல சரிந்தது சோகத்திலும் சோகம். கோலி, படிக்கல் தவிர எந்த ஒரு பெங்களூரு பேட்ஸ்மென்னும் 15 ரன்களைக் கூட தொடவில்லை. 13 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல் ஆடி வந்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளைப் பரிகொடுத்து 45 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரின் பேட்டிங் அரணைத் தகர்த்த ப்ராவோ, 4 ஓவர்களுக்கு 24 ரன்களை விட்டுக் கொடுத்து, கோலி, மேக்ஸ்வெல் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். MI Vs KKR: ரஜினி 'பக்தரின்' அதிரடி; ரோஹித் படைத்த வரலாறு DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி அவரைத் தொடர்ந்து 4 ஓவர்களை வீசிய ஷர்துல் தாகூர் 29 ரன்களைக் கொடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 14ஆவது ஓவர் முதல் ஆட்டம் சென்னையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன் பிறகு ஆட்டம் நிறைவடையும் வரை அவர்களே ஆதிக்கம் செலுத்தி வென்றனர். பெங்களூரின் ஆட்டத்துக்குப் பிறகு, ஷார்ஜா போன்ற மைதானத்தில் சென்னை போன்ற அணிக்கு எதிராக 156 ரன்கள் மட்டுமே குவித்திருப்பது போதாது என கூறப்பட்டது. 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டூப்ளசி ஜோடி சிறப்பாகத் தொடங்கினர். 8.2ஆவது ஓவரில் 38 ரன்களோடு ரிதுராஜும், 9.1ஆவது ஓவரில் 31 ரன்களோடு ஃபாஃப் டூப்ளசியும் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருப்பினும் சென்னையின் பேட்டிங் லைன் அப் வலுவானது என்பதால், அடுத்தடுத்து வந்த மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோரும் அடித்து விளையாடினர். கடைசியில் சுரேஷ் ரெய்னா, தோனி இணை நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி பெற்றனர். இந்த ஜோடி இணைந்து ஐபிஎல் போட்டிகளை நிறைவு செய்வது இது நான்காவது முறை. போட்டி நிறைவடைந்த பிறகு எங்களால் 175 ரன்களைக் குவித்திருக்க முடியும், அப்படி ஒரு இலக்கை வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறினார் விராட் கோலி. ஏப்ரல் மாதம் ஐபிஎல் 2021 சீசன் தொடங்கிய போது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளை வெற்றி கொண்டனர்.

Comments