தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள் - மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆய்வு முடிவில் தகவல்.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆய்வு முடிவுகள் காட்டும் தமிழ்நாடு எப்படி இருந்தது? தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார். இதற்குப் பிறகு, இது தொடர்பான வீடியோ ஒன்றும், சிறு வெளியீடு ஒன்றும் வெளியானது. 2015ஆம் ஆண்டிலிருந்து மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் வெளிப்பட்ட மிகப் பெரிய கட்டடத் தொகுதிகள், தமிழ்நாட்டில் தொல்லியல் துறை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தின. கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகளை நடத்திய இந்தியத் தொல்லியல் துறை, அதற்குப் பிறகு அங்கு ஆய்வுகளை நடத்த விரும்பவில்லை. இதையடுத்து தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை அங்கு ஆய்வுகளை நடத்த ஆரம்பித்தது. அதன்படி 2017ஆம் ஆண்டிலிருந்து அங்கு தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரீகம் இருந்ததை உறுதிசெய்தன. பொதுவாக கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுவாக்கில் இருந்த நகரமயமாக்கம் (Urban Civilisation) தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் பொதுவான கருதுகோளாக இருந்ததுவந்தது. கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வழக்கு: திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பின் வரலாறு ஆப்கானிஸ்தானில் தாலிபனின் இடைக்கால அமைச்சரவை - யாருக்கு என்ன பொறுப்பு? அதேபோல, பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் அங்கிருந்தே தமிழ்நாட்டிற்கு அந்த எழுத்துகள் வந்தன என்றும் கருதப்பட்டது. ஆனால், கீழடியில் நடந்த ஆய்வுகளின் முடிவுகள், நகரமயமாக்கம் குறித்த கருத்துகளை மாற்றின. அந்த காலகட்டத்திலேயே பிராமி எனப்படும் தமிழி பரவலாக எழுதப்பட்டதை, அங்கு கிடைத்த பானை ஓடுகள் உறுதிப்படுத்தின. இங்கு கிடைத்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ரோமெட்ரி முறையில் பகுப்பாய்வு செய்தபோது, அந்த பானை ஓடுகள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்திருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கருப்பு நிறப் பானைகள் கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்களும் தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், கீறல்கள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை தவிர, மணிகள், கற்கள், தாயக்கட்டைகள், கங்கைச் சமவெளிக்கே உரியவை என்று கருதப்பட்ட கறுப்பு நிறப் பானைகள், சீப்புகள் போன்றவை கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள கட்டுமானத்தையும் தொல்பொருட்களையும் வைத்துப் பார்க்கும்போது, கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் இந்தியாவுடனும் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்றும் தெரியவருவதாக மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது. மேலும் இந்த அகழாய்வில் சந்திரன், சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கிடைத்தது. இந்தக் காசை, குப்தர் காலத்தைச் சேர்ந்த ஹர்தேக்கர் வரிசை காசுகளுடன் ஆய்வுசெய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா, இதனை மௌரியர் காலத்துக்கு முற்பட்ட காசு எனக் குறிப்பிட்டிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகவே, கீழடி பகுதிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருப்பதை இந்தக் காசு உறுதி செய்திருப்பதாகக் கருதலாம். அதேபோல, கீழடியிலும் கொற்கையிலும் கிடைத்த கறுப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரியும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியும் கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்ததை உறுதிசெய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் கிடைத்த கரிமப் பொருட்களின் மீது ஏற்கனவே செய்யப்பட்ட கரிமப் பகுப்பாய்வின்படி, அதன் காலம் கி.மு. 585 என தெரியவந்துள்ளதாகவும் தற்போதைய அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மீது செய்யப்பட்ட மேலும் இரண்டு கரிம ஆய்வுகளும் இந்தக் காலக் கணிப்பை உறுதிப்படுத்துவதாகவும் தொல்லியல் துறை கூறுகிறது. ஆதிச்சநல்லூர் வாழ்விட ஆய்வு ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இதுவரை பறம்பு (Burial Ground) பகுதியில் மட்டும் நடைபெற்றுள்ளதால், முதுமக்கள் தாழிகள் பற்றியும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, சடங்குகள், பழக்க வழக்கங்கள் பற்றி மட்டுமே அறியமுடிந்தது. அம்மக்களின் வாழ்விடப் பகுதி, வாழ்வியல் நடைமுறைகள் பற்றி ஏதும் தெரியவில்லை. அதற்கு விடைகாணும் நோக்கத்தில் ஆதிச்சநல்லூரின் வாழ்விடப் பகுதியாகக் கருதப்படும் இடங்களில் இந்த முறை மாநில தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது. இங்கு நடந்த அகழாய்வில் இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க காலம் என இரண்டு காலகட்ட வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்காலத்தைச் சார்ந்த நுண்கற்காலக் கற்கருவிகள் கிடைத்திருப்பதன் மூலம் இரும்புக் காலத்திற்கு முற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரும்புக் காலத்தைப் பொறுத்தவரை, முதுமக்கள் தாழிகளும் அதனோடு கூடிய ஈமப் பொருட்களும் கிடைத்திருப்பதை வைத்து உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழாய்வைப் பொறுத்தவரை, 847 தொல்பொருட்களும் பல்வேறு வகையான பழங்கால மட்பாண்டங்கள் பெரும் எண்ணிக்கையிலும் கிடைத்தன. முதல் முறையாக, தமிழி எழுத்துக்களைக் கொண்ட பானை ஓடுகள் தற்போதைய அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. மேலும், குறியீடுகள் (graffiti) கொண்ட பானை ஓடுகள் 500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. கருப்பு - சிவப்பு மட்பாண்டங்கள் மிகத் தரமான தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட மட்பாண்ட வகைகள் வாழ்விடப்பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும், வெள்ளை நிற புள்ளிகள் இட்ட கருப்பு- சிவப்பு மட்பாண்டங்கள், கிண்ணங்கள் போன்ற பாத்திரங்கள் வாழ்விடப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

Comments